நிகழ்வுகள்
நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியிட்டு விழா தூத்துக்குடியில் நடந்தது
உலக இயக்க இயலில் உயிரியியல்,அறிவியியல்,இயற்பியல்,புவியியல் வரிசையில் அரசியலும் ஒன்று. அரசு + இயல் = அரசியல். ஆங்காங்கே உள்ளதை ஒருங்கிணைத்து அதனை வழிநடத்தும் நிர்வாகத்தை அரசு என்கிறோம். அதனை இயக்குவதே அரசியல். உயிர்களின் நலனுக்காகவே அந்த அரசியல் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தேவைப்படுவதை, தேவைப்படுவோருக்கு கிடைக்கும்படி செய்வதே அரசியலாகும். ஒரு காலத்தில் இருக்க இடமும், படுக்க பாயும், உண்ண உணவும் கிடைக்க செய்வது அரசியலாகும். அடுத்து, அவைகளை சுயமாக உருவாக்கி கொள்ளும் வாய்ப்புகளை பெற்றுத் தருவது அடுத்தக்கட்ட அரசியலாகும். இப்படியாக அடுத்தடுத்த காலத்துக்கேற்ப வசதி வாய்ப்புகளை பெற்றுத்தருவது அரசியல் என்று இருக்கிறது.
இப்படி பெற்றுத் தரும் இடத்தில் இருக்கும் அரசியல் அமைப்பு, குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் நோக்கம் கொண்டிருப்பதை கொள்கை என்கிறோம். இது ஒரு வகை அரசியல் என்கலாம். இந்த வகையில்தான் திராவிட கட்சிகள் பயணிக்கிறது. இந்த கட்சிகள் சொந்த மாநிலம், சொந்த மொழி, இன மக்களுக்காக உழைக்க கூடியது.
பெறுவதையும், வழங்குவதையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கும் கொள்கை கொண்டவர்களை தேசியவாதிகள் என்கிறோம். இது மாநிலம் தாண்டி அனைத்து வகையான மக்களின் தேவைகளை பற்றி சிந்திக்க கூடியகொள்கையாகும். இதற்கான நோக்கம் கொண்டவர்களை தேசிய வாதிகள் என்கிறோம். அப்படிபட்ட தேசிய சிந்தனையாளராக விளங்கி வருபவர் என்.பி.ராஜா என்று அழைக்கப்படும் ராஜா என்.பெரியசாமி. நாம் இந்தியர் கட்சி என்கிற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு நிறைய சமூக பற்றாளர்கள், இருந்தார்கள். இப்பவும் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் என்.பி.ராஜா. தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் கொண்டவர். அதனாலே கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் இப்போது புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
திராவிட முன்னேற்ற கழகம் என்கிற மாநில கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் என்.பெரியசாமி. அவர்., அக்கட்சியினரால் அண்ணாச்சி என்று மரியாதையோடு அழைக்கப்பட்டவர். அவரது மகன் தான் இந்த என்.பி.ராஜா. அதுமட்டுமில்லை. இவரது சகோதரி கீதாஜீவன் தற்போது தமிழக அமைச்சர். இவரது சகோதரர் என்.பி.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக இருக்கிறார். ஆக., அவர்களது குடும்பத்தினர் திமுக என்கிற திராவிட கட்சியில் முக்கிய பதவி வகிக்கின்றனர். ஆனால், என்.பி.ராஜா மட்டும் அதிலிருந்து வேறு பட்டு தேசிய கட்சியின் நிறுவனராக தலைவராக இருந்து வருகிறார்.
கொள்கை மாறுபாடுள்ளவர்கள் தனது கொள்கைக்கு வேறுபடுவோரிடம் இணங்கி இருக்க முடியாது. அப்படித்தான் இருக்கிறார் என்.பி.ராஜா. முழுக்க முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடத்தில் குடும்பத்தினர் இருக்கும்போது, இவர் மட்டும் எதற்காக அதில் பயணிக்க முடியவில்லை. இவரிடம் ஊறிக்கிடப்பது தேசிய சிந்தனை. எனவே எந்தவித பகையும், எதிர்ப்பும் காட்டாமல் தேசிய சிந்தனைக்கு பலம் சேர்ப்பதே தனது பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறார் இவர்.
நாம் ஏற்கனவே கூறியபடி தேசியவாதிகள், குறிப்பிட்ட கொள்கை கொண்டவர்களை விமர்சனம் செய்வதில்லை. ஆனால் அவர்களுக்கு மேலே யோசிப்பார்கள். அவர்களுக்கு மேலே செயல்பட நினைப்பார்கள். அதைத்தான் செய்து வருகிறார் ராஜா. ஒரு கட்டத்தில் இவரின் தேசியவாத கருத்தால் கட்சி தலைமை தம்மை கடிந்து கொள்ளுமோ என்று அண்ணாச்சியே அஞ்சியதும் உண்டு. ஆனாலும் அண்ணா,கருணாநிதி, காமராஜர் என எந்த தலைவர்களையும், அவர்களின் கட்சிகளையும் என்.பி ராஜா விமர்சனம் செய்வதில்லை. அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் விவரிக்கிறார். எது சரி எது தவறு என்று கூறுவதில் யாருக்கும் பிரச்னை வராமல் பார்த்துக் கொண்டார் என்.பி.ஆர்.
நாம் இந்தியர் கட்சி என்கிற தேசிய சிந்தனை இப்போது பல இடங்களில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ’நான் அறிந்த மனிதமும் அரசியலும்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி, அதனை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், உயிரின உருவாக்கம் தொடங்கி, இயற்கை,இறைவன் படைப்பில் மற்ற உயிரினங்களை விட வேறுபட்ட மனிதன், மனிதனின் கண்டுபிடிப்புகள்,இறைநம்பிக்கை மற்றும் கோவில்கள்,மனிதம்,மனிதனின் ஆளுமையும், கொடுமைகளும்,பாசம்,இரக்கம்,கொடை,ஆண்,பெண் உறவு என்று பல்வேறு தலைப்புகளை அப்புத்தகம் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் ‘நான் அறிந்த மனிதமும் அரசியலும்’ என்கிற அந்த புத்தகம் வெளியிட்டு 14.4.2023 அன்று விழா நடந்தது. விழாவில் என்.பி.ராஜா புத்தகத்தை வெளியிட்டார். கட்சியின் மாநில செயலாளர் பி.பொன்ராஜ் வரவேற்றார். பொருளாளர் ஜெயகணேஷ் நன்றி கூறினார். இந்த விழாவில் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து, வழக்கறிஞர் செங்குட்டுவன், கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்,வடக்குமாவட்ட செயலாளர் கருப்பசாமி,அவைத்தலைவர் அமிர்த்காந்தன், நெல்லை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.